அப்துல்லா தேவாரத்தில் இருந்து இரு பாடல்களுக்கு விளக்கம் எழுதி இருக்கும் இந்த கூகிள் பஸ்ஸின் சுட்டியை @scanman ட்விட்டரில் தந்திருந்தார். அப்துல்லா நல்ல முறையில் விளக்கம் சொல்லி இருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் ஒரு சிறிய பிழை ஒன்றும் கண்ணில் பட்டது. முப்புரமும் எரிய என்பதற்கு மூன்று பக்கங்களும் எரிய என்று விளக்கம் தந்திருந்தார். இது அடிக்கடி பார்க்கக் கூடிய ரகர / றகர குழப்பம்தான்.
அவர் விளக்கம் சொல்லி இருக்க வேண்டியது புரம். ஆனா விளக்கம் சொன்னது புறம். அதான் குழப்பம். புறம் வேறு, புரம் வேறு.
புறம் - பக்கம். உட்புறம், வெளிப்புறம், முன்புறம், பின்புறம்ன்னு நாம சொல்லும் போது பக்கம் என்ற பொருளில்தான் சொல்லறோம். ஆனா
புரம் - ஊர். ராமநாதபுரம். விழுப்புரம், அரியநாயகிபுரம்ன்னு பல ஊர்களோட பெயர் அதனாலதான் புரம்ன்னு முடியுது. இளையராஜா ரசிகர்களுக்கு பண்ணைபுரம் தெரியும். கொஞ்ச நாள் முன்னாடி வந்த இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் படத்தில் கூட ஜெய்சங்கர்புரம் அப்படின்னுதான் ஒரு ஊர் பேரு வரும்.
இங்க முப்புரமும் எரிய-ன்னு ஏன் சொன்னாங்கன்னு பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கதை சொல்லலாமா?
மூணு அசுரங்க இருந்தாங்க. அண்ணன் தம்பிங்க. அவங்களுக்கு தமக்கு சாவே வரக்கூடாதுன்னு ஒரு ஆசை. அதனால பிரம்மனை நோக்கி தவம் செஞ்சாங்க. பிரம்மனும் வந்தாரு. என்னப்பா வேணும்ன்னு கேட்டா எங்களுக்கு சாவே வரக்கூடாது சாமீன்னாங்க. அவரு அதெல்லாம் நடக்கிற வேலை இல்லை, வேற எதுனா கேளுங்க அப்படின்னு சொல்லிட்டாரு. இவங்களும் சரி, நம்ம சாவுக்கு ரொம்ப காம்ப்ளிக்கேட்டட் கண்டிஷன் ஒண்ணு போட்டுடலாம். அது நடக்கவே நடக்காது, அதனால நமக்கு சாவே வராதுன்னு நினைச்சு ஒரு வரம் கேட்டாங்க.
மூணு ஊர் கேட்டாங்க. ஊருன்ன பெரிய நகரங்கள். ஆளுக்கு ஒண்ணு. அது சாதாரண நகரங்கள் இல்லை. பறக்கும் நகரங்கள். நினைச்ச நினைச்ச இடத்துக்குப் போகுமாம். ஒண்ணு தங்கம், ஒண்ணு வெள்ளி, ஒண்ணு இரும்பு. பறந்துக்கிட்டே இருக்கிற இந்த ஊருங்க ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறைதான் நேர்க்கோட்டில் வருமாம். அந்த ஊருங்களை மனுசங்க தேவருங்க எல்லாம் அழிக்க முடியாது எல்லா தெய்வங்களோட சக்தியில பாதி இருக்கிறவரு ஒரே ஒரு அம்பு விடலாம். அது மூணு ஊரை ஒரே நேரத்தில் அழிச்சா தங்களுக்கு அழிவு. இல்லைன்னா இல்லை அப்படின்னு கண்டிஷன் போட்டாங்க. பிரம்மனும் விட்டாப் போதும்ன்னு சரின்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
வழக்கம் போல இவங்க அட்டகாசம் தாங்கலை. மனுசங்க தேவருங்க எல்லாம் கதறி அழுதாங்க. மத்த தெய்வங்க எல்லாம் என்ன செஞ்சும் ஒண்ணும் நடக்கலை. கடைசியா எல்லாரும் சிவன் கிட்டப் போனாங்க. எல்லாரும் பேசி பூமியையே தேர் ஆக்கி, சந்திர சூரியர்களை சக்கரமாக்கி என்னென்னவோ பண்ணி சிவன் கிட்ட போனாங்களாம். அவரு இதெல்லாம் எனக்கு எதுக்குடான்னு பக்கத்தில் இருக்கிற பார்வதியைப் பார்த்து லேசா சிரிச்சாராம். அப்படியே அந்த மூன்று நகரங்களையும் ஒரு பார்வை பார்க்க மூணும் எரிஞ்சு போச்சாம். இதான் சிவன் மூணு ஊரையும் எரிச்ச கதை.
ஆனா இன்னும் சிலர் என்ன சொல்லறாங்கன்னா இதை எல்லாம் அப்படியே நேரா எடுத்துக்கக் கூடாது. இந்த மூணு ஊருன்னு சொல்லறது எல்லாம் குறியீடு. சைவத்தில் மும்மலங்கள் அப்படின்னு ஒரு கான்செப்ட் இருக்கு. ஆணவம், கன்மம், மாயை இந்த மூணு விதமான மலங்கள்தான் நம்மை இறைவனிடம் சேர விடாம தடுக்குது. இந்த மூணையும் விட்டா நாம இறைவன் கிட்ட போய்ச் சேரலாம். இந்த மூணையும் சேர்த்துச் சொல்லும் போது மும்மலங்கள்ன்னு சொல்லுவாங்க. இந்த மூணையும்தான் மூணு நகரங்களாய் சொல்லி, சிவன் கிட்ட பொறுப்பை விடு அவர் இந்த மூணையும் விடுத்து நம்மைச் சேர்த்துக்குவார் என்பதுதான் இந்த புராணத்தின் உள்ளர்த்தம்ன்னு சொல்லுவாங்க.
திருமூலர் இதைப் பத்திச் சொல்லும் போது
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை ஆரறிவாரே
அப்படின்னு இந்த குறியீட்டைப் பத்திச் சொல்லி இருக்காரு.
சரி, நாம பேசிக்கிட்டு இருக்கிற விஷயத்துக்கு திரும்ப வருவோம். சரவணபவ எனும் திருமந்திரம்ன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டு நாம நிறைய கேட்டு இருப்போம். அதில் கூட முருகப் பெருமான் சிவனோட நெற்றிக் கண்ணில் இருந்து உதித்தவர்ன்னு சொல்ல “புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த” அப்படின்னு வரும். பார்வதி அவங்களேதான் தீயில் விழுந்தாங்களே தவிர சிவன் அவங்களை எரிக்கலை. அதனால புறம் எரித்த (இடது பக்கத்தில் இருக்கும் பார்வதியை எரித்த) பரமன்னு சொன்னா அர்த்தம் அனர்த்தமாயிடும். ஆக எரிக்கப்பட்டது மூன்று புரங்களே தவிர மூன்று புறங்கள் இல்லை. அதனால் மூன்று பக்கங்களும் எரியன்னு சொல்லாம மூன்று ஊர்கள் எரிய என்பதுதான் சரியான விளக்கம்.
- புரம் - ஊர்
- புறம் - பக்கம்
இதை இனிமே மறக்காம ஞாபகம் வெச்சுக்கலாம்.