Friday, October 21, 2011

பரமன் பார்வதியை எரித்தானா?அப்துல்லா தேவாரத்தில் இருந்து இரு பாடல்களுக்கு விளக்கம் எழுதி இருக்கும் இந்த கூகிள் பஸ்ஸின் சுட்டியை @scanman ட்விட்டரில் தந்திருந்தார். அப்துல்லா நல்ல முறையில் விளக்கம் சொல்லி இருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் ஒரு சிறிய பிழை ஒன்றும் கண்ணில் பட்டது.  முப்புரமும் எரிய என்பதற்கு மூன்று பக்கங்களும் எரிய என்று விளக்கம் தந்திருந்தார். இது அடிக்கடி பார்க்கக் கூடிய ரகர / றகர குழப்பம்தான்.

அவர் விளக்கம் சொல்லி இருக்க வேண்டியது புரம். ஆனா விளக்கம் சொன்னது புறம். அதான் குழப்பம். புறம் வேறு, புரம் வேறு.

புறம் - பக்கம். உட்புறம், வெளிப்புறம், முன்புறம், பின்புறம்ன்னு நாம சொல்லும் போது பக்கம் என்ற பொருளில்தான் சொல்லறோம். ஆனா

புரம் - ஊர். ராமநாதபுரம். விழுப்புரம், அரியநாயகிபுரம்ன்னு பல ஊர்களோட பெயர் அதனாலதான் புரம்ன்னு முடியுது. இளையராஜா ரசிகர்களுக்கு பண்ணைபுரம் தெரியும். கொஞ்ச நாள் முன்னாடி வந்த இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் படத்தில் கூட ஜெய்சங்கர்புரம் அப்படின்னுதான் ஒரு ஊர் பேரு வரும்.

இங்க முப்புரமும் எரிய-ன்னு ஏன் சொன்னாங்கன்னு பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கதை சொல்லலாமா?

மூணு அசுரங்க இருந்தாங்க. அண்ணன் தம்பிங்க. அவங்களுக்கு தமக்கு சாவே வரக்கூடாதுன்னு ஒரு ஆசை. அதனால பிரம்மனை நோக்கி தவம் செஞ்சாங்க. பிரம்மனும் வந்தாரு. என்னப்பா வேணும்ன்னு கேட்டா எங்களுக்கு சாவே வரக்கூடாது சாமீன்னாங்க. அவரு அதெல்லாம் நடக்கிற வேலை இல்லை, வேற எதுனா கேளுங்க அப்படின்னு சொல்லிட்டாரு. இவங்களும் சரி, நம்ம சாவுக்கு ரொம்ப காம்ப்ளிக்கேட்டட் கண்டிஷன் ஒண்ணு போட்டுடலாம். அது நடக்கவே நடக்காது, அதனால நமக்கு சாவே வராதுன்னு நினைச்சு ஒரு வரம் கேட்டாங்க.

மூணு ஊர் கேட்டாங்க. ஊருன்ன பெரிய நகரங்கள். ஆளுக்கு ஒண்ணு. அது சாதாரண நகரங்கள் இல்லை. பறக்கும் நகரங்கள். நினைச்ச நினைச்ச இடத்துக்குப் போகுமாம். ஒண்ணு தங்கம், ஒண்ணு வெள்ளி, ஒண்ணு இரும்பு. பறந்துக்கிட்டே இருக்கிற இந்த ஊருங்க ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறைதான் நேர்க்கோட்டில் வருமாம். அந்த ஊருங்களை மனுசங்க தேவருங்க எல்லாம் அழிக்க முடியாது எல்லா தெய்வங்களோட சக்தியில பாதி இருக்கிறவரு ஒரே ஒரு அம்பு விடலாம். அது மூணு ஊரை ஒரே நேரத்தில் அழிச்சா தங்களுக்கு அழிவு. இல்லைன்னா இல்லை அப்படின்னு கண்டிஷன் போட்டாங்க. பிரம்மனும் விட்டாப் போதும்ன்னு சரின்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

வழக்கம் போல இவங்க அட்டகாசம் தாங்கலை. மனுசங்க தேவருங்க எல்லாம் கதறி அழுதாங்க. மத்த தெய்வங்க எல்லாம் என்ன செஞ்சும் ஒண்ணும் நடக்கலை. கடைசியா எல்லாரும் சிவன் கிட்டப் போனாங்க. எல்லாரும் பேசி பூமியையே தேர் ஆக்கி, சந்திர சூரியர்களை சக்கரமாக்கி என்னென்னவோ பண்ணி சிவன் கிட்ட போனாங்களாம். அவரு இதெல்லாம் எனக்கு எதுக்குடான்னு பக்கத்தில் இருக்கிற பார்வதியைப் பார்த்து லேசா சிரிச்சாராம். அப்படியே அந்த மூன்று நகரங்களையும் ஒரு பார்வை பார்க்க மூணும் எரிஞ்சு போச்சாம். இதான் சிவன் மூணு ஊரையும் எரிச்ச கதை.

ஆனா இன்னும் சிலர் என்ன சொல்லறாங்கன்னா இதை எல்லாம் அப்படியே நேரா எடுத்துக்கக் கூடாது. இந்த மூணு ஊருன்னு சொல்லறது எல்லாம் குறியீடு. சைவத்தில் மும்மலங்கள் அப்படின்னு ஒரு கான்செப்ட் இருக்கு. ஆணவம், கன்மம், மாயை இந்த மூணு விதமான  மலங்கள்தான் நம்மை இறைவனிடம் சேர விடாம தடுக்குது. இந்த மூணையும் விட்டா நாம இறைவன் கிட்ட போய்ச் சேரலாம். இந்த மூணையும் சேர்த்துச் சொல்லும் போது மும்மலங்கள்ன்னு சொல்லுவாங்க. இந்த மூணையும்தான் மூணு நகரங்களாய் சொல்லி, சிவன் கிட்ட பொறுப்பை விடு அவர் இந்த மூணையும் விடுத்து நம்மைச் சேர்த்துக்குவார் என்பதுதான் இந்த புராணத்தின் உள்ளர்த்தம்ன்னு சொல்லுவாங்க.

திருமூலர் இதைப் பத்திச் சொல்லும் போது

அப்ப‌ணி செஞ்ச‌டை ஆதி புராத‌ன‌ன்
முப்புர‌ம் செற்ற‌ன‌ன் என்ப‌ர்க‌ள் மூட‌ர்க‌ள்
முப்புர‌மாவ‌து மும்ம‌ல‌ காரிய‌ம்
அப்புர‌ம் எய்த‌மை ஆர‌றிவாரே

அப்படின்னு இந்த குறியீட்டைப் பத்திச் சொல்லி இருக்காரு.

சரி, நாம பேசிக்கிட்டு இருக்கிற விஷயத்துக்கு திரும்ப வருவோம். சரவணபவ எனும் திருமந்திரம்ன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டு நாம நிறைய கேட்டு இருப்போம். அதில் கூட முருகப் பெருமான் சிவனோட நெற்றிக் கண்ணில் இருந்து உதித்தவர்ன்னு சொல்ல “புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த” அப்படின்னு வரும். பார்வதி அவங்களேதான் தீயில் விழுந்தாங்களே தவிர சிவன் அவங்களை எரிக்கலை. அதனால புறம் எரித்த (இடது பக்கத்தில் இருக்கும் பார்வதியை எரித்த) பரமன்னு சொன்னா அர்த்தம் அனர்த்தமாயிடும்.  ஆக எரிக்கப்பட்டது மூன்று புரங்களே தவிர மூன்று புறங்கள் இல்லை. அதனால் மூன்று பக்கங்களும் எரியன்னு சொல்லாம மூன்று ஊர்கள் எரிய என்பதுதான் சரியான விளக்கம்.


 • புரம் - ஊர்
 • புறம் - பக்கம் 


இதை இனிமே மறக்காம ஞாபகம் வெச்சுக்கலாம்.

21 comments:

 1. இன்னொரு உதா : நாம் சாதாரணமாக பேருந்தில் பார்ப்பது.

  "கரம் சிரம் புறம் நீட்டாதீர்"

  கை மற்றும் தலையை வெளிப் பக்கம் நீட்டாதீர்கள். மீறி நீட்டினால் அவை உங்களுடையது அல்ல. :)

  ReplyDelete
 2. புறம் என்ற சொல் "புறம்பான" என்பதையும் குறிக்குமா?

  எ.கா. : உண்மைக்கு புறம்பான.

  ReplyDelete
 3. புறம், புரம் - இரு சொற்களுக்குமே பலவித அர்த்தங்கள் உள்ளன. நான் பதிவுக்கு சம்பந்தப்பட்ட ஊர் / பக்கம் என்ற பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டேன்.

  அகம் (உள்ளே) என்பதற்கு எதிர்ப்பதமாக புறம் என்றால் வெளியே என்ற ஒரு பொருள் உண்டு. அந்த மூலத்தை ஒட்டிதான் நீங்கள் சொல்லும் புறம்பான. உண்மையை விட்டு வெளியே நிற்கும் என்ற அர்த்தத்தில் வருவது.

  ReplyDelete
 4. நன்றி சார். இத்தனை நாள் இந்த விதத்தில் யோசித்ததில்லை. “புறம்பாக” என்பதை ஒரே வார்த்தையாகத்தான் புரிந்து வைத்திருந்தேன்

  ReplyDelete
 5. உண்மைதான். இனி பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete
 6. ராணி ஆசையா இருந்தா ராஜாவிடம் அந்தப்புரம் போகச் சொல்வாள் - கோபமாக இருந்தால் அந்தப்புறம் போகச் சொல்வாள் - அவ்வளவுதானே?

  ReplyDelete
 7. இந்தப் பதிவில் அந்தப்புரம் பத்தி கொஞ்சம் எழுதலாம்ன்னு நினைச்சேன் ஆனா சாமி கதை எல்லாம் சொல்லி இருக்கோமேன்னு சாய்ஸில் விட்டுட்டேன்.

  புரம்ன்னா ஊர்ன்னு சொல்லியாச்சு. அந்தப்புரம்ன்னு சொன்னா அந்த ஊர் அப்படின்னுதானே அர்த்தம் வருதுன்னு கொஞ்சம் தேடினேன். அந்தப்புரம் என்பதே கொஞ்சம் மருவி வந்த சொல்தானாம்.அந்தர்ப்புரம்தான் சரியான சொல்லாம்.

  அந்தர்தியானம், அந்தரங்கம் இதில் எல்லாம் கூட அந்தர் என்பது உள்ளே என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வடமொழியில் கூட அந்தர் என்றால் உள்ளேதானே. எது முதலில் என்ற ஆராய்ச்சி இங்க வேண்டாம். அந்தர் என்றால் உள்ளே. இப்போ அந்தர்புரத்துக்கு அர்த்தம் சரியா வருதா!

  ReplyDelete
 8. ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியில் பெயர்ச் சொல் இருந்தால், அதை தமிழில் எழுதும் பொழுது, மொழி பெயர்த்து தான் எழுத வேண்டுமா? அதை அப்படியே தமிழில் எழுதக் கூடாதா?

  FACEBOOK - பேஸ்புக் அல்லது பேசுபுக். இதை விட்டு தமிழில் முகநூல் அல்லது முகப்புத்தகம் அப்பிடின்னு எழுதனுமா?

  சென்னையில் GREEENWAYS ROAD என்று ஒரு சாலை உண்டு. அதை தமிழில் பசுமை வழிச் சாலை என்று எழுதுகிறார்கள். ஆனால் அது ஒருவருடய பெயர். தமிழில் எழுதும் பொழுது கிரீன்வேஸ் சாலை என்று தான் எழுத வேண்டும்.

  இப்படி எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பதால், இது போல தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது அல்லவா?

  ReplyDelete
 9. இந்த வருஷம் மார்ச் மாசத்துல, புலவர் வெற்றியழகன் பேசற வாய்ப்பு கிடைச்சுது. அவர் 'புறம்' அப்படிங்கற சொல்லுக்கு 'புறத்தே உள்ள', 'புறம்பான'ன்னு பொருள் சொன்னார்.

  உதாரணமா:"நாட்டுபுறம்" அப்படின்னா நாட்டுக்கு (கோட்டைக்குள் உள்ள தலைநகர்?) புறத்தே, வெளியே, தள்ளி இருக்கற இடம். non-urban. A definition by negation.

  சமீபத்துல வந்த தமிழ் பள்ளிப்புத்தகத்துல "நாட்டுப்புரம்"னு போட்டிருக்காங்கன்னு சொன்னார். அதாவது 'புரம்' அப்படிங்கறதை இடம் அப்படிங்கறதுக்கு உரிய பின்னொட்டா பயன்படுத்திருக்காங்களாம். 'countryside' அப்படிங்கற சொல்லுக்கு இணையா நினைச்சிட்டாங்க போல.

  ReplyDelete
 10. நாட்டுப்புரமா? எகொஇச!!

  அகம் என்பதற்கு எதிர்ப்பதம் புறம். உள்ளே / வெளியே. புறக்கணிப்பு, புறப்படு, புறவீதி, புறம்போக்கு எல்லாமே இந்த புறம் என்ற வேரில் வந்த சொல்தானே! நெல்லைப் பகுதிகளில் வெளியே போயிருக்கிறான் என்பதைச் சொல்ல புறத்தே போயிருக்கிறான் என்றுதான் சொல்வார்கள்.

  கல்வித்துறையில் இருப்பவர்களைத் தெரிந்தவர்கள் தொடர்பு கொண்டு இந்த அபத்தத்தை நிறுத்தியே ஆக வேண்டும்.

  ReplyDelete
 11. விஜய்

  பெயர்ச்சொற்களை இது போல மொழி பெயர்க்கக் கூடாது என்பதே என் கருத்தும். ஆனால் செய்தால் என்ன ஒரு சாரர் கிளம்பி வருவார்கள்.

  Facebook, Google ஆகியவற்றை எதிர்கொள்பதிவுசெய், போகாதற்பார்வைபார் என்றெல்லாம் வேடிக்கையாக மொழிபெயர்த்து இந்த தமிழ்ப்’படுத்தலை’தவறெனச் சுட்டிக் காட்டிப் பார்க்கிறேன். ஆனால் சிலர் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 12. இனி எந்தப்புரம் போனாலும் இந்தப்புறம் மறக்காது.

  (சரியாச் சொல்லியிருக்கேனா?)

  ReplyDelete
 13. @விஜய் வீரப்பன் சுவாமிநாதன் (கொஞ்சம் சுருக்கிக்கங்க சார்.)

  பெயர்கள் - பிராண்ட் நேம் எதையுமே மொழிபெயர்க்கக் கூடாது. தமிழ்ச் செல்வனை tamilselvan என்று எழுதுவதே தவறு என்பது என் கட்சி. நியாயமாக thamizhchelvan என்றுதான் வரவேண்டும். என் வீட்டுக்குப் போகும் வழியில் மிட்நைட் மசாலா என்றொரு பெயர்ப்பலகையில் நள்ளிரவுக் கதம்பம் என்று தமிழாக்கம் சேர்த்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் தமிழ் வளர்ப்பு செய்வதைவிட சும்மா இருக்கலாம்.

  ReplyDelete
 14. @Writerpara

  வீரப்பன்னே கூப்பிடலாம். எங்க வீட்ல எல்லாரும் அப்பிடித்தான் கூப்பிடுவாங்க. google profile-ல பெயர் முழுதாக இருப்பதால், அப்பிடி வருது.

  சார்-ன்னு எல்லாம் சொல்லாதீங்க. நான் ரொம்ப சின்னப் பையன். :)

  @ writerpara @ இலவசக்கொத்தனார்

  நன்றி. என் கட்சியும் அதுதான்.

  அடுத்த சந்தேகம்:

  “செத்தும் கெடுத்த சீதக்காதியா?” அல்லது “செத்தும் கொடுத்த சீதக்காதியா?”

  வீரப்பன்.

  ReplyDelete
 15. சில இணைய தமிழ் அகராதிகள்:

  http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil

  1) Fabricius, Johann Philipp. J. P. Fabricius's Tamil and English dictionary. 4th ed., rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. House, 1972.

  2) Kadirvelu Pillai, Na. Tamil Moli Akarathi. N. Kathiraiver Pillai's Tamil Moli Akarathi: Tamil-Tamil dictionary = Na. Kathiraiver Pillayin Tamil Moliyakarati: Tamil-Tamil akarathi. 6th ed., rev. and enl. Cennai: Pi. Ve. Namacivaya Mutaliyar.

  3) McAlpin, David W. A core vocabulary for Tamil. Rev. ed. Philadelphia, Pa.: Dept. of South Asia Regional Studies, University of Pennsylvania, 1981.

  4) Subramanian, Pavoorchatram Rajagopal. Kriyavin tarkalat Tamil akarati : Tamil-Tamil-Ankilam. 1st ed. Madras: Kriya, 1992. We are currently building a searchable database out of this data. The dictionary will be functional on this site by April 2011.

  5) Tarkalat Tamil maraputtotar akarati : Tamil-Tamil-Ankilam. 1st ed. Chennai : Moli, 1997. We are currently building a searchable database out of this data. The dictionary will be functional on this site by April 2011.

  6) University of Madras. Tamil lexicon. [Madras]: University of Madras, 1936-

  7) Winslow, Miron. A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt, 1862.

  இவற்றில் 6 ஆவதாக குறிப்பிட்டுள்ள "தமிழ் LEXICAN" மிகவும் உபயோகமாக உள்ளது.

  ReplyDelete
 16. பழமுதிர் சோலை .

  இதை "பழம் உதிரும்" சோலை என பொருள் கொள்வதா? (அ) "பழம் முதிர்ந்த" சோலை என பொருள் கொள்வதா ?

  ReplyDelete
 17. சாதாரணன்,

  பழமுதிர்சோலை என்ற பெயரின் காரணம் எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் நான் கேட்டு இருப்பது பழம் உதிரும் சோலை என்பதுதான். ஆனால் கொஞ்சம் யோசித்தால்

  பழமையான முதிர்ந்த சோலை
  முதிர்ந்த பழங்கள் கொண்ட சோலை
  பழங்கள் உதிரும் சோலை
  பழமான ஔவைக்கு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு முதிர வைத்த சோலை

  என வேறு வேறு விதமாக சொல்லிக் கொண்டே போகலாம் போல இருக்கிறதே! :)

  ReplyDelete
 18. முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்னும் ஒரு பாட்டு உண்டே.

  புரத்துக்கும் புறத்துக்கும் நல்ல விளக்கம்.

  புதுசாத் தொடங்கீருக்கீங்க. வாழ்த்துகள். ரீடர்ல சேத்தாச்சு :)

  ReplyDelete
 19. /*ஆனால் ஒரு சிறிய பிழை ஒன்றும் கண்ணில் பட்டது./* ஆனால் சிறிய பிழை ஒன்றும் கண்ணில் பட்டது.

  ReplyDelete
 20. கரெக்ட். ஒரு பிழை அல்லது பிழை ஒன்றும் - இப்படி இருந்திருக்க வேண்டும்

  ReplyDelete