Wednesday, December 14, 2011

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா!

இன்னிக்கு ட்விட்டரில் @nchokkan பயிற்சி கொடுத்து என்பதற்கு சுருக்கமாக பயிற்று என்ற சொல்லை எங்க இருந்தோ பிடிச்சுக்கிட்டு வந்தார். அதைப் பற்றிய பேச்சு வரும் பொழுது @kekkepikkuni பயிற்றி என்பது அழகாக இருக்கு. பயில்வித்து என்பது தவறான பயன்பாடா எனக் கேட்டு இருந்தார். சொக்கனும் பயில்தல் என்பது வேர்ச்சொல் அதனால் பயில்வித்து, பயிற்றுவித்து என்பதும் சரியான பயன்பாடே எனச் சொல்லி இருந்தார்.

இவற்றிடையே நுண்ணிய வேறுபாடு இருப்பதை உணராமலேயே நாம் இச்சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். இது பற்றிப் புரிய கொஞ்சம் இலக்கணப் பக்கம் ஒதுங்க வேண்டி இருக்கிறது. வினை வகைகள் எனக் கேட்டால் செய்வினை, செயப்பாட்டுவினை என்று பலரும் சொல்வர். செய்வினை என்பதற்கு இருக்கும் மற்றொரு பொருளால் இது நினைவில் இருக்கிறது. இது எனக்குத் தெரியாதே, இது என்ன எனக் கேட்பவர்களுக்குப் பின்னாடி பதில் சொல்லலாம். ஆனால் இது தவிரவும் பல வினை வகைகள் உண்டு. அதில் இன்று நமக்குத் தேவையானது தன்வினை. பிறவினை என்ற வகைதான்.

வினை அப்படின்னா என்ன? செயல், தொழில் - இதுதான் வினைக்குப் பொருள். ஒருவன் செய்வது வினை. தன்வினைத் தன்னைச் சுடும் என்ற பழமொழி எல்லாருக்கும் தெரியும். தன் காரியங்களுக்குத் தானே பொறுப்பு. அதன் விளைவுகளை செய்பவனே சந்திக்க வேண்டும் என்பது இந்தப் பழமொழிக்கு விளக்கம். எனவே தன்வினை என்பது தன்னால் செய்யப்படும் செயல். நான் படித்தேன், அவன் செய்தான் இதெல்லாம் தன்வினை. ஊஞ்சலில் ஆடினான் - இது தன்வினை. ஆனா இதையே ஊஞ்சலை ஆட்டினான்னு சொன்னா அது பிறவினை. முதல் வரியில் ஆடுவது அவன். அதனால தன்வினை. ரெண்டாவது வரியில் ஆடுவது ஊஞ்சல். அதை ஆட்டுவது இவன். அதனால இவன் கண்ணோட்டத்துல இது பிறவினை. அவன் திருந்தினான் - தன்வினை. அவன் திருத்தினான் - பிறவினை. திருந்தியது யாரோ ஆனா திருத்தியது இவன்.

இப்போ இதுல ஒரு சின்ன நகாசு வேலை. ராசராசன் பெரிய கோவிலை கட்டினான். ராசராசன் பெரிய கோவிலை கட்டுவித்தான். இந்த ரெண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம்ன்னு பார்த்தோமானா, முதல் வரியில் ராசராசன் கட்டினான். ஆனா ரெண்டாவது வரியில் அவன் மற்றவர்களைக் கொண்டு கட்டினான் அப்படின்னு அர்த்தம் வரும். தாஜ்மஹாலைக் கட்டியது யார்? அப்படின்னு கேட்பாங்க. நீங்க ஷாஜஹான் எனச் சொன்னால் கொத்தனார்தானே கட்டி இருப்பாரு ஷாஜஹானா கட்டினாரு அப்படின்னு சொல்லி மடக்குவாங்க. ஆனா தமிழில் இந்த நுண்ணிய வேறுபாட்டைக் காட்டத்தான் இந்த மாதிரி பிறவினைகள் இருக்கு. தாஜ்மஹாலைக் கட்டுவித்தது யார் என்று கேள்வி வந்தால் அதற்கு ஒரே பதில்தான் ஷாஜஹான்.

கண்ணதாசன் பாட்டு ஒண்ணு இருக்கு - ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணான்னு ஆரம்பிக்கும். கண்ணன் ஆட்டுவித்தால் நாம ஆடணும். கண்ணன் என்ன நம்ம கையில் கயிறு கட்டியா ஆட்டறான்? இல்லை அப்படி இருந்தா ஆட்டினால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணான்னு கவிஞர் பாட்டு எழுதி இருப்பாரு.

நேரடியாகச் செய்யாமல் வேறு விதமாகச் செய்யும் பொழுது ஆட்டுவித்தல் எனச் சொல்கிறோம். இந்த மாதிரி பிறவினை வரும்பொழுது பி, வின்னு எல்லாம் சேர்ந்து வரும். கட்டுவித்தான், ஆட்டுவித்தான் - இதுல எல்லாம் வி வருது. நடப்பித்தான், படிப்பித்தான் - இதுல எல்லாம் பி வருது.

ஆட்டினான் /ஆட்டுவித்தான்
கட்டினான் / கட்டுவித்தான்
திருத்தினான் / திருத்துவித்தான்

இந்த மாதிரி எல்லாம் சொல்லும் பொழுது முதலில் வரும் சொற்கள் நேரடியாக அந்த வினையை செய்வதையும் இரண்டாவதாக வரும் சொற்கள் இது நேரடி செயலாக இல்லாமல் பிறர் மூலமாகவோ மறைமுகமாகவோ செய்வதையும் பிரித்துக் காட்டுகின்றன. அதனால இனிமே எழுதும் பொழுது சரியான வினைச் சொற்களைக் கையாண்டால் இந்த நுண்ணிய வித்தியாசங்களை அழகாக எடுத்துச் சொல்ல முடியும்.

சொக்கன் சொன்ன பயிற்று என்பதை ஒருவர் தானே பயிற்சி கொடுக்க பயன்படுத்தினோமானால், வேறொருவர் கொண்டு பயிற்சி கொடுப்பதை பயிற்றுவி எனச் சொல்ல வேண்டும். பயிற்றினான் - தானே சொல்லிக் கொடுத்தான். பயிற்றுவித்தான் - ட்யூஷன் வாத்தியாரை ஏற்பாடு பண்ணி சொல்லிக்குடுத்தான். இதான் வித்தியாசம். புரியுதா?

முதலில் பேசிய செய்வினை, செயப்பாட்டுவினையையும் ஒரு பார்வை பார்த்துடலாமா. நான் பாட்டு பாடினேன். என்னால் பாட்டு பாடப்படுகிறது. இந்த ரெண்டு வரிகளும் ஒரே கருத்தைதான் சொல்கின்றன. ஆனால் சொல்லப்படும் கோணம் வேறு. முதல் வகை செய்வினை. ரெண்டாவது செயப்பாட்டு வினை. இதைத்தான் ஆங்கிலத்தில் Direct Speech and Indirect Speech எனக் குறிப்பிடுவர்.

இன்று அவன் என்னை அறுத்தான், இன்று நான் அவனால் அறுக்கப்பட்டேன். எப்படிச் சொன்னாலும் எனக்குச் செய்வினை வெச்சுட்டாதாத்தான் அர்த்தம் இல்லையா!

Tuesday, December 13, 2011

சந்தேகம் பற்றி ஓர் ஐயம்!

எனக்குச் சந்தேகமா எனக்கு சந்தேகமா என்று ஒரு கேள்வி. நண்பர் ஜ்யோவ்ராம் எனக்குச் சந்தேகம்தான் சரி எனச் சொல்ல, பெனாத்தல் சுரேஷ் அங்கு வலி மிகாது என்று சொல்கிறார்.

எனக்கு ஐயம் எனச் சொன்னால் இந்த குழப்பமே வராது. ஆனால் இது போன்ற இடங்களில் வலி மிகுமா மிகாதா என்பதைப் பார்ப்போம்.

இலக்கணம் என்ன சொல்கிறது? நான்காம் வேற்றுமை விரியில் வல்லின மெய் மிகும். அது என்ன நான்காம் வேற்றுமை? நான்காம் வேற்றுமை உருபு கு. எனக்கு உனக்கு அவனுக்கு எவனுக்கு சொக்கனுக்கு கந்தனுக்கு என்று வருவது. இந்த மாதிரி நான்காம் வேற்றுமை விரிந்து வரும் பொழுது வலி மிகும். எனக்குத் தா, அவனுக்குப் புரியாது என்பது போல.

க்,ச்,த்,ப் ஆகிய நான்கு மெய்கள் மட்டுமே மிகும். அவனுக்குச் செய்வது, இவனுக்குச் செல்லம், சுந்தருக்குச் சொல்வது என்று நாம் சொல்லும் பொழுது அங்கு ச் என்பது உச்சரிப்பில் மிகுந்தே வருகிறது.

நேரடியாகப் பார்க்கும் பொழுது இந்த விதியினால் எனக்குச் சந்தேகம் என்பதே சரி எனத் தோன்றும். சந்தேகம் என நாம் தமிழில் எழுதினாலும் அதனை ஸந்தேகம் என்றே உச்சரிக்கிறோம். அது அப்படியான உச்சரிப்பை கொண்ட வடமொழிச் சொல்லைத்தான் மூலமாகக் கொண்டிருக்கிறது.
எனக்கு சந்தேகம் எனச் சொல்லும் பொழுது enakku sandhegam என்று உச்சரிக்கிறோம். enakkuch chandhegam என உச்சரிப்பதில்லை.

மேலும் வருமொழி அந்நிய மொழிச் சொல்லாக இருந்தால் ஒற்று மிகுமா என்ற ஆராய்ச்சியே வேண்டாம் என்பது என் தமிழாசிரியர் சொல்லித் தந்தது. சமீபத்தில் எழுத்தாளர் பாராவுடன் பேசும் பொழுது கூட இந்தக் காரணத்தினால்தான் தமிழ் பேப்பர் என அவர் தொடங்கிய மின்னிதழுக்குப் பெயர் வைத்ததாகச் சொன்னார். தமிழ் பேப்பர் என உச்சரிக்கும் பொழுது வலி மிகுந்தே வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் கூட தமிழ் பேப்பர் என்றே எழுதுவது நலம் எனச் சொல்லித் தந்தார் பாரா.

ஐயம் என்ற தமிழ்ச்சொல்லை விடுத்து சந்தேகம் எனப் புழங்கும் பொழுது உச்சரிப்புக்கு முன்னுரிமை கொடுத்து வலி மிகாது எனக்கு சந்தேகம் என்றே எழுதுதல் நலம்.

Friday, October 21, 2011

பரமன் பார்வதியை எரித்தானா?



அப்துல்லா தேவாரத்தில் இருந்து இரு பாடல்களுக்கு விளக்கம் எழுதி இருக்கும் இந்த கூகிள் பஸ்ஸின் சுட்டியை @scanman ட்விட்டரில் தந்திருந்தார். அப்துல்லா நல்ல முறையில் விளக்கம் சொல்லி இருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் ஒரு சிறிய பிழை ஒன்றும் கண்ணில் பட்டது.  முப்புரமும் எரிய என்பதற்கு மூன்று பக்கங்களும் எரிய என்று விளக்கம் தந்திருந்தார். இது அடிக்கடி பார்க்கக் கூடிய ரகர / றகர குழப்பம்தான்.

அவர் விளக்கம் சொல்லி இருக்க வேண்டியது புரம். ஆனா விளக்கம் சொன்னது புறம். அதான் குழப்பம். புறம் வேறு, புரம் வேறு.

புறம் - பக்கம். உட்புறம், வெளிப்புறம், முன்புறம், பின்புறம்ன்னு நாம சொல்லும் போது பக்கம் என்ற பொருளில்தான் சொல்லறோம். ஆனா

புரம் - ஊர். ராமநாதபுரம். விழுப்புரம், அரியநாயகிபுரம்ன்னு பல ஊர்களோட பெயர் அதனாலதான் புரம்ன்னு முடியுது. இளையராஜா ரசிகர்களுக்கு பண்ணைபுரம் தெரியும். கொஞ்ச நாள் முன்னாடி வந்த இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் படத்தில் கூட ஜெய்சங்கர்புரம் அப்படின்னுதான் ஒரு ஊர் பேரு வரும்.

இங்க முப்புரமும் எரிய-ன்னு ஏன் சொன்னாங்கன்னு பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கதை சொல்லலாமா?

மூணு அசுரங்க இருந்தாங்க. அண்ணன் தம்பிங்க. அவங்களுக்கு தமக்கு சாவே வரக்கூடாதுன்னு ஒரு ஆசை. அதனால பிரம்மனை நோக்கி தவம் செஞ்சாங்க. பிரம்மனும் வந்தாரு. என்னப்பா வேணும்ன்னு கேட்டா எங்களுக்கு சாவே வரக்கூடாது சாமீன்னாங்க. அவரு அதெல்லாம் நடக்கிற வேலை இல்லை, வேற எதுனா கேளுங்க அப்படின்னு சொல்லிட்டாரு. இவங்களும் சரி, நம்ம சாவுக்கு ரொம்ப காம்ப்ளிக்கேட்டட் கண்டிஷன் ஒண்ணு போட்டுடலாம். அது நடக்கவே நடக்காது, அதனால நமக்கு சாவே வராதுன்னு நினைச்சு ஒரு வரம் கேட்டாங்க.

மூணு ஊர் கேட்டாங்க. ஊருன்ன பெரிய நகரங்கள். ஆளுக்கு ஒண்ணு. அது சாதாரண நகரங்கள் இல்லை. பறக்கும் நகரங்கள். நினைச்ச நினைச்ச இடத்துக்குப் போகுமாம். ஒண்ணு தங்கம், ஒண்ணு வெள்ளி, ஒண்ணு இரும்பு. பறந்துக்கிட்டே இருக்கிற இந்த ஊருங்க ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறைதான் நேர்க்கோட்டில் வருமாம். அந்த ஊருங்களை மனுசங்க தேவருங்க எல்லாம் அழிக்க முடியாது எல்லா தெய்வங்களோட சக்தியில பாதி இருக்கிறவரு ஒரே ஒரு அம்பு விடலாம். அது மூணு ஊரை ஒரே நேரத்தில் அழிச்சா தங்களுக்கு அழிவு. இல்லைன்னா இல்லை அப்படின்னு கண்டிஷன் போட்டாங்க. பிரம்மனும் விட்டாப் போதும்ன்னு சரின்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

வழக்கம் போல இவங்க அட்டகாசம் தாங்கலை. மனுசங்க தேவருங்க எல்லாம் கதறி அழுதாங்க. மத்த தெய்வங்க எல்லாம் என்ன செஞ்சும் ஒண்ணும் நடக்கலை. கடைசியா எல்லாரும் சிவன் கிட்டப் போனாங்க. எல்லாரும் பேசி பூமியையே தேர் ஆக்கி, சந்திர சூரியர்களை சக்கரமாக்கி என்னென்னவோ பண்ணி சிவன் கிட்ட போனாங்களாம். அவரு இதெல்லாம் எனக்கு எதுக்குடான்னு பக்கத்தில் இருக்கிற பார்வதியைப் பார்த்து லேசா சிரிச்சாராம். அப்படியே அந்த மூன்று நகரங்களையும் ஒரு பார்வை பார்க்க மூணும் எரிஞ்சு போச்சாம். இதான் சிவன் மூணு ஊரையும் எரிச்ச கதை.

ஆனா இன்னும் சிலர் என்ன சொல்லறாங்கன்னா இதை எல்லாம் அப்படியே நேரா எடுத்துக்கக் கூடாது. இந்த மூணு ஊருன்னு சொல்லறது எல்லாம் குறியீடு. சைவத்தில் மும்மலங்கள் அப்படின்னு ஒரு கான்செப்ட் இருக்கு. ஆணவம், கன்மம், மாயை இந்த மூணு விதமான  மலங்கள்தான் நம்மை இறைவனிடம் சேர விடாம தடுக்குது. இந்த மூணையும் விட்டா நாம இறைவன் கிட்ட போய்ச் சேரலாம். இந்த மூணையும் சேர்த்துச் சொல்லும் போது மும்மலங்கள்ன்னு சொல்லுவாங்க. இந்த மூணையும்தான் மூணு நகரங்களாய் சொல்லி, சிவன் கிட்ட பொறுப்பை விடு அவர் இந்த மூணையும் விடுத்து நம்மைச் சேர்த்துக்குவார் என்பதுதான் இந்த புராணத்தின் உள்ளர்த்தம்ன்னு சொல்லுவாங்க.

திருமூலர் இதைப் பத்திச் சொல்லும் போது

அப்ப‌ணி செஞ்ச‌டை ஆதி புராத‌ன‌ன்
முப்புர‌ம் செற்ற‌ன‌ன் என்ப‌ர்க‌ள் மூட‌ர்க‌ள்
முப்புர‌மாவ‌து மும்ம‌ல‌ காரிய‌ம்
அப்புர‌ம் எய்த‌மை ஆர‌றிவாரே

அப்படின்னு இந்த குறியீட்டைப் பத்திச் சொல்லி இருக்காரு.

சரி, நாம பேசிக்கிட்டு இருக்கிற விஷயத்துக்கு திரும்ப வருவோம். சரவணபவ எனும் திருமந்திரம்ன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டு நாம நிறைய கேட்டு இருப்போம். அதில் கூட முருகப் பெருமான் சிவனோட நெற்றிக் கண்ணில் இருந்து உதித்தவர்ன்னு சொல்ல “புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த” அப்படின்னு வரும். பார்வதி அவங்களேதான் தீயில் விழுந்தாங்களே தவிர சிவன் அவங்களை எரிக்கலை. அதனால புறம் எரித்த (இடது பக்கத்தில் இருக்கும் பார்வதியை எரித்த) பரமன்னு சொன்னா அர்த்தம் அனர்த்தமாயிடும்.  ஆக எரிக்கப்பட்டது மூன்று புரங்களே தவிர மூன்று புறங்கள் இல்லை. அதனால் மூன்று பக்கங்களும் எரியன்னு சொல்லாம மூன்று ஊர்கள் எரிய என்பதுதான் சரியான விளக்கம்.


  • புரம் - ஊர்
  • புறம் - பக்கம் 


இதை இனிமே மறக்காம ஞாபகம் வெச்சுக்கலாம்.

Thursday, October 20, 2011

வணக்கம்.

நினைத்த மாத்திரத்தில் ஒரு வலைப்பதிவு தொடங்கிவிட முடிகிறது. ப்ளாகருக்கு நன்றி சொல்லித் தொடங்குவதே தருமம்.

ட்விட்டரில் அடிக்கடி தமிழ் மொழி - இலக்கணம் சார்ந்த சந்தேகங்கள் நிறைய கேட்கப்படுகின்றன. நண்பர் இலவசக் கொத்தனார் தம்மால் முடிந்த அளவு கேட்கிற அத்தனை பேருக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார். சில சமயம் எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன். பெனாத்தல் சுரேஷ், சொக்கன் ஆகியோரும்ஓரளவு சந்தேகம் களையும் திருப்பணியில் ஈடுபடுவார்கள்..

நாங்கள் யாருமே தமிழறிஞர்கள் அல்லர். ஆனால் கூடியவரை பிழையின்றி,  இலக்கண துரோகமின்றித் தமிழ் எழுதவேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள். கற்றுத் தீராத கடலின் நிரந்தர , கரையோர சந்தாதாரர்கள்.

சந்தேகம் கேட்கும் நண்பர்களுக்கு எங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லி வருகிறோம். ட்விட்டரின் துண்டெழுத்துப் பெருவெளியில் அவை கரைந்து காணாமல் போய்விடுகின்றனவே என்ற கவலையில் இன்று இந்தத் தளம் திறக்கப்பட்டிருக்கிறது.

நண்பர்கள் தமது மொழி-இலக்கணம் சார்ந்த சந்தேகங்களை இனி இங்கே கேட்கலாம்.  இது மற்றவர்களும் தேடிப்படிக்க உதவியாக இருக்கும். தெரிந்தவரை சந்தேகங்களைத் தீர்க்கப் பார்க்கிறோம். தெரியாதவற்றை, வல்லுநர்களிடம் கேட்டுத் தெளிவிக்கவும் முயற்சி செய்கிறோம்.

நம் மொழியை நாமே நாரடிக்கக் நாறடிக்கக் கூடாது என்று எண்ணுகிற அனைவருக்கும் நல்வரவு.

பாரா/