Wednesday, December 14, 2011

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா!

இன்னிக்கு ட்விட்டரில் @nchokkan பயிற்சி கொடுத்து என்பதற்கு சுருக்கமாக பயிற்று என்ற சொல்லை எங்க இருந்தோ பிடிச்சுக்கிட்டு வந்தார். அதைப் பற்றிய பேச்சு வரும் பொழுது @kekkepikkuni பயிற்றி என்பது அழகாக இருக்கு. பயில்வித்து என்பது தவறான பயன்பாடா எனக் கேட்டு இருந்தார். சொக்கனும் பயில்தல் என்பது வேர்ச்சொல் அதனால் பயில்வித்து, பயிற்றுவித்து என்பதும் சரியான பயன்பாடே எனச் சொல்லி இருந்தார்.

இவற்றிடையே நுண்ணிய வேறுபாடு இருப்பதை உணராமலேயே நாம் இச்சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். இது பற்றிப் புரிய கொஞ்சம் இலக்கணப் பக்கம் ஒதுங்க வேண்டி இருக்கிறது. வினை வகைகள் எனக் கேட்டால் செய்வினை, செயப்பாட்டுவினை என்று பலரும் சொல்வர். செய்வினை என்பதற்கு இருக்கும் மற்றொரு பொருளால் இது நினைவில் இருக்கிறது. இது எனக்குத் தெரியாதே, இது என்ன எனக் கேட்பவர்களுக்குப் பின்னாடி பதில் சொல்லலாம். ஆனால் இது தவிரவும் பல வினை வகைகள் உண்டு. அதில் இன்று நமக்குத் தேவையானது தன்வினை. பிறவினை என்ற வகைதான்.

வினை அப்படின்னா என்ன? செயல், தொழில் - இதுதான் வினைக்குப் பொருள். ஒருவன் செய்வது வினை. தன்வினைத் தன்னைச் சுடும் என்ற பழமொழி எல்லாருக்கும் தெரியும். தன் காரியங்களுக்குத் தானே பொறுப்பு. அதன் விளைவுகளை செய்பவனே சந்திக்க வேண்டும் என்பது இந்தப் பழமொழிக்கு விளக்கம். எனவே தன்வினை என்பது தன்னால் செய்யப்படும் செயல். நான் படித்தேன், அவன் செய்தான் இதெல்லாம் தன்வினை. ஊஞ்சலில் ஆடினான் - இது தன்வினை. ஆனா இதையே ஊஞ்சலை ஆட்டினான்னு சொன்னா அது பிறவினை. முதல் வரியில் ஆடுவது அவன். அதனால தன்வினை. ரெண்டாவது வரியில் ஆடுவது ஊஞ்சல். அதை ஆட்டுவது இவன். அதனால இவன் கண்ணோட்டத்துல இது பிறவினை. அவன் திருந்தினான் - தன்வினை. அவன் திருத்தினான் - பிறவினை. திருந்தியது யாரோ ஆனா திருத்தியது இவன்.

இப்போ இதுல ஒரு சின்ன நகாசு வேலை. ராசராசன் பெரிய கோவிலை கட்டினான். ராசராசன் பெரிய கோவிலை கட்டுவித்தான். இந்த ரெண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம்ன்னு பார்த்தோமானா, முதல் வரியில் ராசராசன் கட்டினான். ஆனா ரெண்டாவது வரியில் அவன் மற்றவர்களைக் கொண்டு கட்டினான் அப்படின்னு அர்த்தம் வரும். தாஜ்மஹாலைக் கட்டியது யார்? அப்படின்னு கேட்பாங்க. நீங்க ஷாஜஹான் எனச் சொன்னால் கொத்தனார்தானே கட்டி இருப்பாரு ஷாஜஹானா கட்டினாரு அப்படின்னு சொல்லி மடக்குவாங்க. ஆனா தமிழில் இந்த நுண்ணிய வேறுபாட்டைக் காட்டத்தான் இந்த மாதிரி பிறவினைகள் இருக்கு. தாஜ்மஹாலைக் கட்டுவித்தது யார் என்று கேள்வி வந்தால் அதற்கு ஒரே பதில்தான் ஷாஜஹான்.

கண்ணதாசன் பாட்டு ஒண்ணு இருக்கு - ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணான்னு ஆரம்பிக்கும். கண்ணன் ஆட்டுவித்தால் நாம ஆடணும். கண்ணன் என்ன நம்ம கையில் கயிறு கட்டியா ஆட்டறான்? இல்லை அப்படி இருந்தா ஆட்டினால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணான்னு கவிஞர் பாட்டு எழுதி இருப்பாரு.

நேரடியாகச் செய்யாமல் வேறு விதமாகச் செய்யும் பொழுது ஆட்டுவித்தல் எனச் சொல்கிறோம். இந்த மாதிரி பிறவினை வரும்பொழுது பி, வின்னு எல்லாம் சேர்ந்து வரும். கட்டுவித்தான், ஆட்டுவித்தான் - இதுல எல்லாம் வி வருது. நடப்பித்தான், படிப்பித்தான் - இதுல எல்லாம் பி வருது.

ஆட்டினான் /ஆட்டுவித்தான்
கட்டினான் / கட்டுவித்தான்
திருத்தினான் / திருத்துவித்தான்

இந்த மாதிரி எல்லாம் சொல்லும் பொழுது முதலில் வரும் சொற்கள் நேரடியாக அந்த வினையை செய்வதையும் இரண்டாவதாக வரும் சொற்கள் இது நேரடி செயலாக இல்லாமல் பிறர் மூலமாகவோ மறைமுகமாகவோ செய்வதையும் பிரித்துக் காட்டுகின்றன. அதனால இனிமே எழுதும் பொழுது சரியான வினைச் சொற்களைக் கையாண்டால் இந்த நுண்ணிய வித்தியாசங்களை அழகாக எடுத்துச் சொல்ல முடியும்.

சொக்கன் சொன்ன பயிற்று என்பதை ஒருவர் தானே பயிற்சி கொடுக்க பயன்படுத்தினோமானால், வேறொருவர் கொண்டு பயிற்சி கொடுப்பதை பயிற்றுவி எனச் சொல்ல வேண்டும். பயிற்றினான் - தானே சொல்லிக் கொடுத்தான். பயிற்றுவித்தான் - ட்யூஷன் வாத்தியாரை ஏற்பாடு பண்ணி சொல்லிக்குடுத்தான். இதான் வித்தியாசம். புரியுதா?

முதலில் பேசிய செய்வினை, செயப்பாட்டுவினையையும் ஒரு பார்வை பார்த்துடலாமா. நான் பாட்டு பாடினேன். என்னால் பாட்டு பாடப்படுகிறது. இந்த ரெண்டு வரிகளும் ஒரே கருத்தைதான் சொல்கின்றன. ஆனால் சொல்லப்படும் கோணம் வேறு. முதல் வகை செய்வினை. ரெண்டாவது செயப்பாட்டு வினை. இதைத்தான் ஆங்கிலத்தில் Direct Speech and Indirect Speech எனக் குறிப்பிடுவர்.

இன்று அவன் என்னை அறுத்தான், இன்று நான் அவனால் அறுக்கப்பட்டேன். எப்படிச் சொன்னாலும் எனக்குச் செய்வினை வெச்சுட்டாதாத்தான் அர்த்தம் இல்லையா!

8 comments:

  1. எதோ குழப்பாச்சி இருக்காப்பல இருக்கு..

    என்னைப்பொறுத்தவரை:

    பயில் - என்பது செய்வினை (ஆக்டிவ் வாய்ஸ்) வேர்ச்சொல் - பயின்றான் (he studied)

    பயிற்று என்பது செயப்பாட்டுவினை (பாஸிவ் வாய்ஸ்)

    பயிற்றினான், பயிற்றுவித்தான், பயில்வித்தான் எல்லாம் இதற்கான மைனர் வேரியேஷன்ஸ்தான். அர்த்தம் வேறுபாடு இருக்குதான். பயிற்றினான் பயிற்றுவித்தான் - சொல்லிக்கொடுத்தான், சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செஞ்சான் ரேஞ்சுல..

    ReplyDelete
  2. பயின்றேன் = நான் கற்றேன்
    பயிற்றினேன் = நான் இன்னொருவருக்குச் சொல்லிக்கொடுத்தேன்
    பயில்வித்தேன் = யாரோ யாருக்கோ சொல்லிக்கொடுக்க நான் ஏற்பாடு செய்தேன்

    சரியா வருதா?

    On a lighter note:

    பெயில்வித்தேன் = காசு வாங்கிக்கொண்டு கோர்ட்டில் ஒருவருக்கு பெயில் கிடைக்க ஏற்பாடு செய்தேன் :>

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  3. சொக்கன், உங்கள் லைட்டர் நோட்டில் பிழை உள்ளது!

    பயில்வித்தேன் - நல்ல பாடம் சொல்லிக்கொடுக்க ஆசிரியரை ஏற்பாடு செய்தேன்.

    பெயில்வித்தேன் - குஜாலாக பாடம் சொல்லிக்கொடுக்க வைத்து, ஃபெயில் ஆக்கினேன்.

    ReplyDelete
  4. சொக்கன் நீங்க சொன்னது சரியா இருக்கு. பயில்வித்தேன்னுக்கும் பயிற்றுவித்தேனுக்கும் வித்தியாசம் இருக்கான்னு தெரியலை. இல்லைன்னுதான் நினைக்கறேன். பயிற்றுவித்தேன் என்றுதான் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    பெனாத்தல் - இதை நேரடியாக ஆங்கில இலக்கணத்தோடு ஒப்பிடத் தெரியவில்லை. கொஞ்சம் படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. செய்வினை /செயப்பாட்டுவினை - Active/Passive

    Direct /Indirect - இதற்கு தமிழில் தெரியவில்லை. படித்ததாகவும் நினைவு இல்லை?

    Direct :: அவன் கேட்டான்,"ஏன் இந்தக் கொலைவெறி?"

    Indirect :: அவன் ஏன் இந்தக் கொலைவெறி என்று கேட்டான்.

    ReplyDelete
  7. பயில்வித்தேன் சரியான சொற்றொடராகத் தெரியவில்லை. பயிற்றுவித்தேன் என்றுதான் நான் படித்திருக்கிறேன். செயல் - செய்வித்தேன். செயல்வித்தேன் அல்ல.

    ஆனாலும் குழப்பமாத்தான் இருக்கு. :(

    ReplyDelete
  8. ராகவன்

    அதான் நானும் சொன்னேன். பயில்வித்தேன் என்பது அதிகம் கேட்டறியாதது.

    பயில்-பயிற்று-பயிற்றுவி என்பது சரியா வருகிறது.

    ReplyDelete