Tuesday, December 13, 2011

சந்தேகம் பற்றி ஓர் ஐயம்!

எனக்குச் சந்தேகமா எனக்கு சந்தேகமா என்று ஒரு கேள்வி. நண்பர் ஜ்யோவ்ராம் எனக்குச் சந்தேகம்தான் சரி எனச் சொல்ல, பெனாத்தல் சுரேஷ் அங்கு வலி மிகாது என்று சொல்கிறார்.

எனக்கு ஐயம் எனச் சொன்னால் இந்த குழப்பமே வராது. ஆனால் இது போன்ற இடங்களில் வலி மிகுமா மிகாதா என்பதைப் பார்ப்போம்.

இலக்கணம் என்ன சொல்கிறது? நான்காம் வேற்றுமை விரியில் வல்லின மெய் மிகும். அது என்ன நான்காம் வேற்றுமை? நான்காம் வேற்றுமை உருபு கு. எனக்கு உனக்கு அவனுக்கு எவனுக்கு சொக்கனுக்கு கந்தனுக்கு என்று வருவது. இந்த மாதிரி நான்காம் வேற்றுமை விரிந்து வரும் பொழுது வலி மிகும். எனக்குத் தா, அவனுக்குப் புரியாது என்பது போல.

க்,ச்,த்,ப் ஆகிய நான்கு மெய்கள் மட்டுமே மிகும். அவனுக்குச் செய்வது, இவனுக்குச் செல்லம், சுந்தருக்குச் சொல்வது என்று நாம் சொல்லும் பொழுது அங்கு ச் என்பது உச்சரிப்பில் மிகுந்தே வருகிறது.

நேரடியாகப் பார்க்கும் பொழுது இந்த விதியினால் எனக்குச் சந்தேகம் என்பதே சரி எனத் தோன்றும். சந்தேகம் என நாம் தமிழில் எழுதினாலும் அதனை ஸந்தேகம் என்றே உச்சரிக்கிறோம். அது அப்படியான உச்சரிப்பை கொண்ட வடமொழிச் சொல்லைத்தான் மூலமாகக் கொண்டிருக்கிறது.
எனக்கு சந்தேகம் எனச் சொல்லும் பொழுது enakku sandhegam என்று உச்சரிக்கிறோம். enakkuch chandhegam என உச்சரிப்பதில்லை.

மேலும் வருமொழி அந்நிய மொழிச் சொல்லாக இருந்தால் ஒற்று மிகுமா என்ற ஆராய்ச்சியே வேண்டாம் என்பது என் தமிழாசிரியர் சொல்லித் தந்தது. சமீபத்தில் எழுத்தாளர் பாராவுடன் பேசும் பொழுது கூட இந்தக் காரணத்தினால்தான் தமிழ் பேப்பர் என அவர் தொடங்கிய மின்னிதழுக்குப் பெயர் வைத்ததாகச் சொன்னார். தமிழ் பேப்பர் என உச்சரிக்கும் பொழுது வலி மிகுந்தே வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் கூட தமிழ் பேப்பர் என்றே எழுதுவது நலம் எனச் சொல்லித் தந்தார் பாரா.

ஐயம் என்ற தமிழ்ச்சொல்லை விடுத்து சந்தேகம் எனப் புழங்கும் பொழுது உச்சரிப்புக்கு முன்னுரிமை கொடுத்து வலி மிகாது எனக்கு சந்தேகம் என்றே எழுதுதல் நலம்.

7 comments:

  1. இதுபோல் பல சந்தேகங்களை பதிவுகளின் மூலம் நீக்குங்கள்.. :)

    ReplyDelete
  2. நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete
  3. நன்றி சார்.

    இப்போது எந்தெந்த வார்த்தைகள் எல்லாம் வேற்று மொழிச் சொற்கள் என்று எழுதும்போதெல்லாம் ஐயம் ஏற்படும் :-)

    ReplyDelete
  4. சேலம் தேவா, என்ன சந்தேகம் எனச் சொன்னால் தெரிஞ்சதைச் சொல்லலாம். கேள்வி கேளுங்கள், பதில் தெரிந்தால் சொல்கிறோம், தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களைக் கேட்டு சொல்கிறோம்.

    ReplyDelete
  5. வடகரை வேலன்.

    நன்றி.

    (நன்றிக்கு நன்றி விளையாட்டு இன்னுமா நடக்குது>?!) :)

    ReplyDelete
  6. ஜ்யோவ்,

    சந்தேகம் ஏற்படாம ஐயம் ஏற்பட்டுச்சு பாருங்க. :))

    எல்லாம் சேர்ந்து கத்துக்கலாம்! :)

    ReplyDelete
  7. வருமொழி அந்நியமா இருந்தா ரொம்ப யோசிக்க வேண்டியதில்ல. எப்படி வேணும்னாலும் சொல்லிக்கலாம். பனிப்பானு வெள்ளிப் பொன் செங்கதிரோன்னு அருணகிரியும் சொல்லியிருக்காரு.

    ReplyDelete